ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்

25-3-2018 முதல் 31-3-2018 வரை

4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்) கிருஷ்ணாபுரம் காலனி,

மதுரை-14. அலைபேசி: 99440 02365.

சந்திரன் மாறுதல்:

ஆரம்பம்- மிதுனம்.

26-3-2018- கடகம்.

28-3-2018- சிம்மம்.

30-3-2018- கன்னி.

கிரக பாதசாரம்:

சூரியன்: உத்திரட்டாதி- 3, 4, ரேவதி- 1.

செவ்வாய்: மூலம்- 3, 4.

புதன்: உத்திரட்டாதி- 2, 1, பூரட்டாதி- 4.

குரு: விசாகம்- 4.

சுக்கிரன்: ரேவதி- 4,

அஸ்வினி- 1, 2.

சனி: மூலம்- 3.

ராகு: ஆயில்யம்- 1.

கேது: திருவோணம்- 3.

கிரக மாற்றம்:

புதன் வக்ரம் + நீசம்

+ அஸ்தமனம்.

குரு வக்ரம்.

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)

Advertisment

மேஷ ராசிநாதன் செவ்வாய் 9-ல் குருவின் வீட்டில் குருவோடு பரிவர்த்தனை. அதாவது செவ்வாய் வீட்டில் குருவும், குருவின் வீட்டில் செவ்வாயும் நிற்பது சிறப்பு! அத்துடன் 10-க்குடைய சனி, 9-ல் செவ்வாயோடு சேர்க்கை. இதில் ஒரு விசேஷம் என்னவென்றால் 10-க்குடையவர் 9-ல் இருப்பது தர்மகர்மாதிபதி யோகமாகும். எனவே அட்டமச்சனியும் விலகிய நிலையில் எல்லாம் உங்களுக்கு அனுகூலமாகவே அமையும் நிலை உண்டு. இருந்தாலும் 9-க்குடைய குரு 8-ல் மறைந்துவிட்டாரே என்று ஒரு சந்தேகமும் ஆதங்கமும் ஏற்படலாம். அந்தச் சிந்தனைக்கே சிறிதும் இடமில்லாத வகையில்தான் குருவும் செவ்வாயும் பரிவர்த்தனையாக இருக்கிறார்களே! ரயில்வே ரிசர்வேஷனலில் வெயிட்டிங் லிஸ்டில் உள்ள உங்களுக்கு பயணத்துக்கு இரு தினங்களுக்கு முன்னரே "சீட் கன்பர்ம்' ஆகிவிடும். ஆகவே பயணம் இனிதாகிவிடும். 4-ஆம் இடத்து ராகுவும் 10-ஆம் இடத்துக் கேதுவும் சிலருக்கு ஆரோக்கியம் அல்லது தேக சுகத்தில் பிரச்சினைகளை உருவாக்கினாலும், குரு பார்வையால் மலைபோல வரும் பிரச்சினைகளும் பனிபோல விலகிவிடும். தாயார், சுகம், கல்வி, வாகனயோகம் இவற்றைக் குறிக்கும் இடம் 4-ஆம் இடம். அங்கு ராகு நிற்பதால், இவற்றால் சிலருக்குப் பிரச்சினைகள் உருவலும் பயப்படத் தேவையில்லை. சாம்பாரில் கொஞ்சம் உப்பு கூடியமாதிரி தெரிந்தாலும் ஹோட்டல்களில் அல்லது விருந்தில் கொஞ்சம் வெந்நீரைக் கலந்து சரிசெய்வதுபோல சமாளித்துவிடலாம். தாயார் கிரகம் சந்திரன் திருப்தியாக இருப்பதால் எந்தப் பாதிப்பும் இல்லை. அதேபோல கல்வி நிலையிலும் பாதிப்புக்கு இடமில்லை. புதன்- வித்யாகாரகன் நீசபங்கம்; மேலும் குரு பார்வை! படிப்பு யோகத்திலும் தடையில்லை. தொடர் கல்வியோகம் உண்டு!

பரிகாரம்: திண்டுக்கல் அருகில் தாடிக்கொம்புவில் சௌந்திர ராஜப்பெருமாள் கோவிலில் ஹயக்ரீவருக்கும் தன்வந்திரிக்கும் தனித்தனி சந்நிதி உண்டு. கல்வித்தடை விலகவும், கல்வி முன்னேற்றத்துக்கும் ஹயக்ரீவருக்கும், ஆரோக்கியத்துக்கு தன்வந்திரிக்கும் பூஜை செய்யவும்.

ரிஷபம்

(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)

ரிஷப ராசிநாதன் சுக்கிரன் 11-ல் உச்சம்! அவருடன் புதன், சூரியன் சேர்க்கை. அவர்களுக்கு குரு பார்வை- செவ்வாய் பார்வை! 2, 5-க்குடைய புதன் நீசபங்க ராஜயோகம். கலை, கலாச்சாரம், பண்பாடு, மருத்துவம் போன்றவற்றில் ஆர்வமும் நாட்டமும் அதிகம் ஏற்படும். சிலர் அரசியல் வாழ்க்கையில் முழுமூச்சாக ஈடுபடலாம். இளமையில் அரசியல் வாழ்க்கையில் அடிபட்டு, மிதிபட்டு, உதைபட்டு தேகமெல்லாம் தியாகத் தழும்புகள் ஏற்பட்டு, பிற்காலத்தில் பொறுப்புள்ள பதவிகள் வகிக்கும் யோகம் உண்டாகும். குறிப்பிட்ட சிலரைத்தான் ஆத்மார்த்தமான நண்பர்களாக வைத்திருப்பார்கள். மற்றவர்களையெல்லாம் ஒப்புக்கு சப்பாக- வசக்கட்டு கணக்கில்தான் வைத்திருப்பார்கள். 8, 11-க்குடைய குரு 7-ல் அமர்ந்து ராசியைப் பார்ப்பதும் பலம்தான்! சிலருக்குத் தார தோஷம் இருக்கும்- அதாவது இரு தார யோகம் எனலாம். முதல் தாரம் வந்ததுமுதல் வாழ்க்கையே போராட்டம்தான்! இரண்டாம் தாரம் அமைந்தபிறகு வாழ்க்கையில் எல்லா வகையிலும் ஏற்றம், உயர்வு, வெற்றிமேல் வெற்றி உங்கள் கனவுகள் எல்லாம் நனவாகும். வசதிகளும் பெருகிவிடும். இன்றைய கிரக அமைப்புகள் உங்களுக்கு சாதகமாக அமையும். அதிர்ஷ்டவசமாக உங்களுக்கு வி.ஐ.பி.க்களின் அறிமுகமும் உதவியும் கிடைப்பதால் முடியாமல் நிற்கும் பல காரியங்கள் உடனடியாக முடிந்துவிடும். குடும்பாதிபதி புதன் நீசபங்கம் பெற்று குருவின் பார்வையைப் பெறுவதால் எதிர்பாராத அதிர்ஷ்டமும், பொருளாதார வளர்ச்சியும், திடீர் தனப்ராப்தி யோகமும் அமையும்.

Advertisment

பரிகாரம்: 6-க்குடைய சுக்கிரன் 11-ல் உச்சம். 12-க்குடைய புதன் 11-ல் நீசபங்கம். இவர்களுக்கு குருபார்வை! கடன் நிவர்த்திக்கு கும்பகோணம் அருகில் (குடவாசல் பாதை) திருச்சேறை சென்று கடன் நிவர்த்தீஸ்வரரை வழிபடவும். பொருளாதார வளர்ச்சிக்கு சொர்ணாகர்ஷண பைரவரை வழிபடவேண்டும். அவரது மந்திர ஜபம் பாராயணம் செய்யலாம்.

மிதுனம்

(மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய)

மிதுன ராசிநாதன் புதன் 10-ல் குரு வீட்டில் நீசபங்க ராஜயோகம். யோகாதிபதியான சுக்கிரன் சேர்க்கை. அவர்களுக்கு வீடுகொடுத்த குரு 6-ல் நின்றாலும் சுயசாரம் (விசாகம்- 4) பெற்று அவர்களைப் பார்க்கிறார். குரு பார்க்க கோடி நன்மை! 6-ஆம் இடம் போட்டி, பொறாமை, கடன், எதிர்ப்பு, தடை, வைத்தியச் செலவுகளைக் குறிக்கும் இடம் என்றாலும், குருவுக்கு வீடு கொடுத்த செவ்வாய் குரு வீட்டில் பரிவர்த்தனை என்பதால் மேற்கண்ட 6-ஆம் இடத்துப் பலன்கள் எல்லாம் யோகமாகவும் நன்மையாகவும் அமையும். கடந்தகால அனுபவத்தால் காரியத் தடைகளும், உடல்நலப் பாதிப்பும், வைத்தியச் செலவும், சக்திக்குமீறிய கடன் தொல்லையும் உங்கள் தலைமேல் சுமத்தப்பட்டு தவியாய்த் தவித்தீர்கள். இந்த வாரம் அந்த நிலை அடியோடு மாறிவிடும். பொதுவாக வாழ்க்கையிலும் பொருளாதாரச் சூழ்நிலையிலும் குழப்பமான நிலைமாறி தெளிவான சூழ்நிலை உருவாகும். தேவையற்ற பகை, படப்படப்பான நிலை எல்லாம் மாறிவிடும். 2-ல் உள்ள ராகுவும் 8-ல் உள்ள கேதுவும் சிலருக்கு பக்தி மார்க்கத்திலும் ஞான மார்க்கத்திலும் நெருக்கத்தை உருவாக்கும். மேலும் 9-க்குடையவர் 9-ஆம் இடத்தையே பார்ப்பதும், 10-க்குடையவர் 10-ஆம் இடத்தையே பார்ப்பதும், பலம். இறையருளும் குருவருளும் திருவருளும் பரிபூரணமாக உங்களை இயக்கும்! வெளியூர்ப் பயணங்கள் வெற்றியைத் தரும். சிலர் கோவில் வேண்டுதல்களைப் போய் நிறைவேற்றலாம். எந்தக் கடன் இருந்தாலும் தெய்வக்கடனை ஞாபகமாக நிறைவேற்றுவது எல்லா வகையிலும் நல்லதுதானே!

Advertisment

பரிகாரம்: குலதெய்வம் இருக்குமிடம் சென்று வழிபடலாம். சிலருக்கு குலதெய்வம் தெரியாமல் இருக்கலாம். அப்படிப்பட்டவர்கள் திருவண்ணாமலைக்கும் காஞ்சிபுரத்துக்கும் சென்று வழிபட்டால் குலதெய்வக் குற்றம் நீங்கி மறுமலர்ச்சி உண்டாகும். "யாதொரு தெய்வம் கொண்டீர் அத்தெய்வமாகி ஆங்கே மாதொரு பாகனார்தாம் வந்தருளுவார். எத்தெய்வம் வழிபட்டாலும் அது முக்கண் ஆதியை அடையும் என்பது விதி.

krishnan

கடகம்

(புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய)

கடக ராசியில் ஜென்ம ராகு நின்றாலும், 7-ல் கேது நின்றாலும், 5-ல் குரு அமர்ந்து 9-ஆம் இடத்தையும் ஜென்ம ராசியையும் பார்ப்பது சிறப்பு, பொதுவாக குரு பார்க்க கோடி நன்மை. அதிலும் அவர் 9-க்குடையவர். பாக்கியாதிபதி பாக்கியத்தையும் லாபத்தையும், வெற்றி ஸ்தானத்தையும், ஜென்ம ராசியையும் பார்க்கிறார். ஆகவே போலீசார் வழக்குத் தொடுப்பதற்கு முன்பே கோர்ட்டில் முன்ஜாமீன் வாங்கி வைத்துக்கொண்டது போன்ற ஒரு சூழ்நிலை! 6-ல் செவ்வாய்- சனி சேர்க்கை- கைது நடவடிக்கைகளைத் தவிர்க்கமுடியும். எவ்வளவு பெரிய வழக்கு விவகாரங்களையும் எளிதாகச் சமாளித்து வெற்றிகொள்ளலாம். உங்கள் பலத்தில் பாதிபலம் மனைவிக்கும் உண்டு. தசரதச் சக்கரவர்த்தி ஒரு அசுரனை வெற்றிகொள்ள கைகேயியின் உதவியை நாடினார். அந்த வெற்றிக்காக கைகேயி இரண்டு வரம் வாங்கினாள். அதைப் பின்னாளில் கேட்பதாகச் சொல்லிவிட்டாள். ராமருக்கு முடிசூட்டும் விழா சமயத்தில் கைகேயி அந்த இரண்டு வரங்களையும் கேட்டதாகப் புராணம்! ஒன்று- ராமன் காட்டுக்குப் போகவேண்டும். இரண்டு- ராமனுக்குப் பதில் பரதனுக்குப் பட்டாபிஷேகம் செய்யவேண்டும் என்பதுதான். இதுதான் இராமாயணம் நடக்கக் காரணமானது. 9-க்குடைய குரு 5-ல் அமர்ந்து 9-ஆம் இடத்தையும் ஜென்ம ராசியையும் பார்ப்பதால் குருவருளும் திருவருளும் உங்களை வழிநடத்த, உங்கள் கோரிக்கைகளும் எண்ணங்களும் ஈடேறும். ஏதோ ஒரு சுமை உங்களைவிட்டு இறங்கியதாக உணர்வீர்கள்.

பரிகாரம்: சத்ரு ஜெயம் ஏற்படவும், கடன் நிவர்த்தி ஏற்படவும், வெற்றிகுவிக்கவும், சென்னை- கல்கத்தா சாலையில் (கோயம்பேட்டிலிருந்து பஸ் உண்டு) பஞ்சேஷ்டி ஆலயம் சென்று வழிபட வேண்டும். அகச்சத்ரு, புறச்சத்ரு இரண்டும் விலகும். புனித்தலம். அகத்தீஸ்வரர் திருக்கோவில். தொடர்புக்கு: என். கணேஷ் குருக்கள் செல்: 98413 44867.

சிம்மம்

(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய)

சிம்ம ராசிநாதன் சூரியன் ராசிக்கு 6-ல் மறைகிறார். அவருடன் 2, 5-க்குடைய புதனும் மறைவு, நீசம். 3, 10-க்குடைய சுக்கிரனும் மறைவு, உச்சம்! அதனால் புதனுக்கு நீசபங்க ராஜயோகம். மூவரும் மறைவு என்றாலும் அவர்களுக்கு வீடு கொடுத்த குரு, செவ்வாயின் வீட்டில் இருந்து அவர்களைப் பார்க்க, குரு வீட்டில் சனியோடு சேர்ந்து செவ்வாயும் அந்த மூவரையும் பார்க்கிறார். செவ்வாய் மட்டும் பார்த்தாலும் சனியும் பார்ப்பதாகத்தான் எடுத்துக்கொள்ளவேண்டும். அதாவது சிம்ம ராசிக்கு 9-க்குடைய செவ்வாய், 10-க்குடைய சுக்கிரனைப் பார்ப்பது தர்மகர்மாதிபதி யோகம். நடக்கவேண்டிய நன்மைகள் எல்லாம் நல்லபடி நடக்கும் என்பது திட்டவட்டமான உண்மை. என்றாலும் நடப்பது சற்றுத் தாமதமாக நடக்கும். கூட்டுறவு சொசைட்டி வங்கிக் கடனுக்கு விண்ணப்பித்தால் இந்த வாரம் முடிந்துவிடும், அடுத்த வாரம் முடிந்துவிடும், இன்னும் இரண்டுநாளில் முடிந்துவிடும், எல்லாபேப்பரும் பாஸாகி எம்.டி.யின் கையெழுத்துக்கு வைத்தாகிவிட்டது என்று ஏ.ஜி. எம். சொல்லுவார். கடைசியில் ஒரு "சாலரி சர்ட்டிபிக்கேட்' வைக்கவில்லை என்கிறார்கள். அது கிடைத்தவுடன் லோன் சாங்ஷன் ஆகிவிடும் என்பார்கள். புதிதாக பழனி பாத யாத்திரை போகிறவர்கள் நடக்கமுடியாமல் இன்னும் எவ்வளவு தூரம் நடக்கவேண்டும் என்று கேட்பது போல! ஒரு திரைப்படத்தில் காதலியைப் பார்க்க ரயிலில் போகும் காதலன் பக்கத்து சீட்டுக்காரரிடம் ரயில் எத்தனை மணிக்குப் போய்ச் சேரும் என்று ஐந்து நிமிடத்துக்கு ஒருமுறை நச்சரித்துக்கொண்டே இருப்பான். அந்த மாதிரி இப்போது உங்களுக்கு நினைத்த காரியம் நிறைவேறும்வரை பொறுமை இருக்காது. பணியில் இருப்பவர்கள்- குறிப்பாக பத்திரிகைத் துறையில் இருப்பவர்களுக்கு எல்லா மேட்டரையும் முன்னதாக முடித்து "லே அவுட்'டுக்கு அனுப்பும் பொறுப்பு தலைக்கும்மேலே இருக்கும். முக்கியமான "ஷெட்யூல் மேட்டர்' வராமல் தாமதமாகும் வேளையில் தலையைப் பிய்த்துக்கொள்ளும் நிலைக்கு ஆளாகி அவதிப்பட நேரும். இதுதான் சூரியன், புதன், சுக்கிரன் 8-ல் மறைந்த பலன். என்றாலும் குருவும் செவ்வாயும் பார்ப்பதால் முடிவில் எல்லாம் குறிப்பிட்டபடி நிறைவேறிவிடும். மேலிடத்தாரின் பாராட்டையும் பெற்றுவிடலாம்.

பரிகாரம்: தொழில், உத்தியோகம் சம்பந்தமான பிரச்சினைகள் தொய்வில்லாமல் நிறைவேற மேட்டூர் அருகில் (சேலம்- மேட்டூர் பாதையில்) நங்கவள்ளி சென்று லட்சுமி நரசிம்மருக்கு ஒரு அபிஷேக பூஜை செய்யவேண்டும். பெரிய பாலாஜி, செல்: 94435 15904, சின்ன பாலாஜி, செல்: 94439 41014. இருவரையும் தொடர்புகொண்டு யார் முறை என்று தெரிந்து பூஜை செய்யலாம்.

கன்னி

(உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய)

கன்னி ராசிநாதன் தன் ராசிக்கு 7-ல் நீசமாக இருந்தாலும் உச்சம் பெற்ற சுக்கிரனுடன் சேர்ந்ததால் புதனுக்கு நீசபங்க ராஜயோகம் ஏற்படும். எனவே செல்வாக்கு, செயல்திறமை, நடவடிக்கைகள் எதிலும் சோடை இல்லாமல் பிரகாசிக்கும். அதேபோல புதன் 1, 10-க்குடையவர் என்பதால் வாழ்க்கை, தொழில், ஜீவிதம், செய்யும் பணி, உத்தியோகம் எல்லாவற்றிலும் முன்னேற்றமாகவும் திருப்தியாகவும் இருக்கும். 10-ஆம் இடத்தைச் செவ்வாயும் சனியும் பார்ப்பது ஒருவகையில் சிறு பாதிப்பு என்றாலும், 10-க்குடையவரை குரு பார்ப்பதால் பாதிப்பு நீங்கி பலிதமாகும். அதற்குக் காரணம் 11-ஆம் இடத்து ராகுதான். அவர் தடையில்லாத வெற்றிகளை ஏற்படுத்தி ஜெயிக்க வைப்பார். சிலருக்கு 4-ல் செவ்வாய், சனி சேர்க்கை சில சங்கடங்களையும் நோய் உபாதைகளையும் வைத்தியச் செலவுகளையும் உருவாக்கும். என்றாலும் செவ்வாயும் குருவும் பரிவர்த்தனை என்பதால் மலைபோல வரும் துன்பம் பனிபோல விலகிவிடும். 6-க்குடைய சனி 4-ல் பூமிகாரகனோடு சம்பந்தம் என்பதால் சிலர் பூமி, வீடு, வாகனம், மனை, நிலம் சம்பந்தமாக வங்கிக்கடனோ தனியார் கடனோ வாங்கும் அவசியம் உண்டாகும். 5-ல் கேது, புத்திரகாரகன் குரு 3-ல் மறைவு என்பதால் ஒருசிலருக்கு புத்திர சம்பந்தமான தோஷமோ, அற்பப் பலன்களோ உண்டாகலாம். ஜாதக தசாபுக்திகள் பாதகமாக இருந்தால் கருச்சிதைவு, வாரிசு தோஷம் போன்ற பலன்கள் உண்டாகலாம். அதற்குரிய பரிகாரங்களைத் தேடிக்கொள்வது நல்லது. புத்திரதோஷம் என்பது வேறு, புத்திர சோகம் என்பது வேறு! குழந்தையே இல்லை என்பது புத்திரதோஷம்! குழந்தை உருவாகி உருவாகி அழிவதும் பிறந்து பிறந்து இறப்பதும் புத்திர சோகம்! ஒருசில ஜாதகத்தில் கதலி வந்தியா தோஷம் ஏற்படும். அதாவது கதலி என்பது வாழை! வாழை ஒரே வாரிசை (கன்றை) ஈன்று அழிந்துவிடும். அதுபோல ஒரே ஒரு குழந்தையோடு நின்றுவிடும். "நாம் இருவர் நமக்கு இருவர்' என்பது கடந்தகால வாக்கியம். இப்போது "நாம் இருவர் நமக்கு ஒருவர்' என்பதுதான் நடைமுறை. எதிர்காலத்தில் அதுவும்மாறி "நமக்கு நாம் மட்டுமே போதும்' என்று வந்தாலும் வரலாம்.

பரிகாரம்: கரு உருவாகி உருவாகி கலையும் தம்பதிகள் "கருவளர்ச்சேரி' சென்று வழிபடவேண்டும். அகத்திய முனிவரும் அவர் மனைவி லோபமுத்ராவும் தம்பதியாகப் பூஜைசெய்து வழிபட்ட தலம். இங்கு அம்பாள் சுயம்பு. அபிஷேகம் கிடையாது. சாம்பிராணி தைலக் காப்பிட்டு புனுகுச் சட்டம் மட்டுமே சாற்றப்படும். குடும்பகோணம்- வலங்கைமான் சாலையில் மருதாநல்லூரில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் கருவளர்ச்சேரி உள்ளது.

துலாம்

(சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய)

துலா ராசிநாதன் சுக்கிரன் துலா ராசிக்கு 6-ல் மறைந்தாலும் உச்சம்! அவருக்கு வீடு கொடுத்த குரு 2-ல் நின்று சுக்கிரனைப் பார்க்கிறார். சுக்கிரனோடு சூரியனும், புதனும் 6-ல் மறைவு. இதில் புதன் நீசம், வக்ரம், அஸ்தமனம். ஆனால் சுக்கிரன் உச்சம். அதனால் புதனுக்கு நீசபங்க ராஜயோகம் ஏற்படும். சூரியன் பிதுர்காரகன், புதன் பிதுர் ஸ்தானாதிபதி. இருவரும் 6-ல் மறைவதால் ஒருசில ஜாதக அமைப்பில் தகப்பனாரே விரோதியாக செயல்படலாம். அல்லது தகப்பனார் நோய் நொடி, வைத்தியச்செலவு என்று நித்தியகண்டம் பூரண ஆயுசாக இருக்கலாம். அல்லது பிதுரார்ஜித சொத்துகள் பிரச்சினை ஓடியடையாமல் கோர்ட்டு- போலீஸ் விவகாரம் என்று அலையலாம். அடிதடி பிரச்சினையாகலாம். என்றாலும் ஜாதக தசாபுக்திகள் அனுகூலமாக அமைந்தாலும், சூரியன், புதன், சுக்கிரனை குரு பார்ப்பதோடு, குருவுக்கு வீடு கொடுத்த செவ்வாயும் பார்ப்பதாலும் பிரச்சினைகள் பெரிதாகாமல் தீர்வுக்கு இடமுண்டாகும். 10-ல் உள்ள ராகு, 4-ல் உள்ள கேது குடும்பத்தில் முக்கியமானவர்களின் ஆரோக்கிய பாதிப்பை ஏற்படுத்தலாம். அல்லது கேதச்செய்தி உண்டாகலாம். அதைவைத்து சண்டை போட்டுக்கொண்ட குடும்பம் ஒன்றுசேர்ந்து ஒற்றுமை உண்டாகலாம். "இனி ஒன்றாகப் பிறக்கப் போகிறோமா?' என்ற தத்துவம் உண்டாகி பகைமறந்து பெருந்தன்மையாக நடந்துகொள்ளலாம். தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடுமல்லவா! ஒருசிலரின் அனுபவத்தில் ஒரு திருமணத்தால் பிரிந்த குடும்பம் இன்னொரு திருமணத்தால் ஒன்றுகூடும். உறவும் பகையும் உண்டாவது கிரகங்களின் செயல்கள்தான். ஆவதும் அழிவதும் கிரகங்களின் விளையாட்டுதான். "ஆட்டுவித்தால் ஆடாதாரே கண்ணா' என்று பாடிய மாதிரி- கிரகங்கள் ஆட்டுவிக்க நாம் ஆடுகிறோம். சாந்தமான நிலையில் சமாதானமாக சிந்தித்தால் "ஈகோ' உணர்வுகள் இல்லாமல் பறந்தோடிவிடும்.

பரிகாரம்: விதியை மாற்றியமைக்க- கிரகங்களின் செயல்களை சாதகமாக்கிக்கொள்ள திருப்பட்டூர் சென்று வழிபடவேண்டும். திருச்சி- சென்னை ஹைவேஸில் சிறுகனுர் வழி நான்கு கிலோமீட்டர் தொலைவில் உள்ள பிரம்மபுரீஸ்வரர்- வரதராஜப் பெருமாள்- காசி விசுவநாதர் மூவரையும் வழிபடவும். பதஞ்சலி முனிவரின் ஜீவசமாதி உள்ளது.

விருச்சிகம்

(விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய)

விருச்சிக ராசிநாதன் செவ்வாய் 2-ல் குருவின் வீட்டில் தனுசு ராசியில் நிற்க, செவ்வாய் வீட்டில் விருச்சிக ராசியில் குரு இருக்க, இருவரும் பரிவர்த்தனையாக இருக்கிறார்கள். பரிவர்த்தனைக்கு அவரவர் ராசியில் அவரவர் இருப்பதற்குச் சமமான பலன்- அதாவது செவ்வாய் விருச்சிகத்திலும், குரு தனுசுவிலும் ஆட்சியாக இருப்பதற்குச் சமம்! எனவே ஏழரைச்சனியின் கடைக்கூறாக இருந்தாலும் உங்களை பாதிக்காது. சனி பகவான் யாரையும் விட்டுவைக்கவில்லை. எல்லாரையும் பிடித்தார் என்றாலும் பிள்ளையாரையும் ஆஞ்சனேயரையும் பிடிக்க முடியவில்லை. பிள்ளையாரைப் பிடிக்கப் போனபோது சனியிடம் பிள்ளையார் "நாளை வா' என்று சொல்லி, முதுகில் ஒரு அரச இலையில் "நாளை' என்று எழுதி விட்டுப் போ என்றாராம். மறுநாள் சனி வந்தபோது முதுகைக் காட்டி "நாளை என்று நீதானே எழுதினாய்' என்று நாளைக் கடத்திவிட்டாராம். அதேபோல ஆஞ்சனேயர் ராம சேவையாக இலங்கைக்குப் பாலம் அமைத்தபோது சனி "உங்களைப் பிடிக்க வேண்டும்' என்றுகூற "சந்தோஷம்; என் தலையில் ஏறி உட்கார்' என்று தன் தலையில் ஏற்றி அமர்த்தி அதன்மேல் ஒரு பெரிய பாறையை "ராமராம' என்று ஜெபித்து வைக்க சனி பகவானால் பாறை சுமையைத் தாங்க முடியாமல், "தயவுசெய்து என்னை விட்விடுங்கள்' என்று கெஞ்ச, "என்னை வழிபடுவோருக்கு எந்தத் துன்பமும் செய்யக்கூடாது' என்று சனி பகவானிடம் சத்தியம் வாங்கிக்கொண்டு ஆஞ்சனேயர் விட்டுவிட்டாராம். உண்மையில் இவர்கள் இருவரும் பிரம்மச்சாரிகள் என்பதால் அவர்களை சனி பகவான் துன்புறுத்த முடியவில்லை. பந்தபாசம், நேசம், குடும்ப உறவு என்று இருப்பவருக்குத்தானே எல்லாக் கவலையும் பொறுப்பும் வரும். அப்படிப்பட்டவர்களைத்தான் சனி சீண்டிப்பார்ப்பார்; சோதனை செய்வார்; வேதனைப்படுத்துவார். சோறு கண்ட இடம் சொர்க்கம்- திண்ணைகண்ட இடம் தூக்கம் என்று நாடோடி வாழ்க்கையாக ஓடிக்கொண்டிருப்பவர்களிடம் சனி பகவானுக்கு வேலை இல்லை! பங்களாவில் வாழும் பணக்காரர்களின் இடத்தில் வெள்ளி- தங்கப்பொருட்கள் இருக்கும். திருடனுக்கு வாய்ப்பு கிடைக்கும். குடிசை வாழ் ஏழையிடம் அலுமினியம், மண்பானைதானே இருக்கும்? சனி அதைக்கொண்டு போய் என்ன செய்யப்போகிறார்?

பரிகாரம்: அறந்தாங்கி அருகில் (பட்டுக்கோட்டை) எட்டியத்தளி என்ற ஊரில் அகத்தியர் வழிபட்ட அகத்தீசுவரரை வழிபட்டால் சனியின் வேதனையும் சோதனையும் விலகிவிடும்.

தனுசு

(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய)

தனுசு ராசிநாதன் குரு 12-ல் மறைந்தாலும் அவருக்கு வீடு கொடுத்த செவ்வாய் தனுசு ராசியில் இருப்பதால்- இருவரும் பரிவர்த்தனை என்பதால் அவரவர் ராசியில் அவரவர் இருப்பதாக அர்த்தம். அதாவது தனுசு ராசியில் குருவும், விருச்சிகத்தில் செவ்வாயும் ஆட்சியாக இருப்பதற்குச் சமம். எனவே உங்களுடைய காரியங்களும் செயல்களும் திட்டமிட்டபடி கச்சிதமாக நடக்கும். எண்ணங்கள் ஈடேறும். இருந்தாலும் ஜென்மச்சனியும் செவ்வாயும் சேர்க்கை என்பதால் சில காரியங்கள் உடனுக்குடன் நிறைவேறிவிடும். சில காரியங்கள் வழவழா கொழகொழா என்று இழுத்துக்கொண்டே இருக்கும். சில காரியங்கள் பிரேக் இல்லாத வண்டி தாறுமாறாக ஓடிப்போய் எதிலாவது முட்டி மோதி நிற்கும். ஆனால் யாருக்கும் உயிர்ச்சேதம் ஏற்படாது. சனி 10-ஆம் இடம், 7-ஆம் இடங்களைப் பார்க்கிறார். சிலருக்கு தொழில் டென்ஷன், சிலருக்கு கணவர் அல்லது மனைவிக்கு ஆரோக்கியக்குறைவு, வைத்தியச்செலவு, இன்னும் சிலருக்கு எந்த பாதிப்பும், இல்லையென்றாலும் கற்பனைக் கவலை, கற்பனைப்பயம், சிலருக்கு தேவையற்ற விரயச்செலவுகள், வீண்செலவுகள். சிலருக்கு எவ்வளவு சம்பாத்தியம் வந்தாலும் அதற்கு என்று ஒரு செலவு, மிச்சப்படுத்த முடியாத நிலை! இந்தச் செலவுகளும் விரயங்களும் எவ்வளவு நாள்தான் இருக்கும்? குரு 12-ல் இருக்கும் வரைதான். பங்குனி 28-ல் (11-4-2018) குரு வக்ரகதியாக துலா ராசிக்கு மாறிவிடுவார். துலா ராசியில் 18-5-2018 வரை (வைகாசி-6) இருப்பார். பிறகுதான் மீண்டும் குரு 12-ஆம் இடத்துக்கு விருச்சிகத்துக்கு மாறி பங்குனி-14 (27-3-2020) வரை 12-ல் தொடர்ந்து இருப்பார். அக்காலமும் விரயம் என்றாலும் செலவு என்றாலும் அவை பயனுள்ள செலவு, சுபச்செலவு என்று அமையும். அக்காலம் சிலர் குடியிருப்பு மாறலாம். அல்லது பதவி உயர்வு அடையலாம். ஊதிய உயர்வு பெறலாம். சிலர் சொந்த வீடு கிரயம் முடிக்கும் யோகமும் உண்டாகும். அல்லது தொழில், உத்தியோகம் சம்பந்தமாக வெளியூர் கேம்ப் அல்லது வெளிநாடு போகலாம். மொத்தத்தில் குரு துலாம்- விருச்சிக ராசிகளில் சஞ்சரிக்கும் காலம் தனுசு ராசிக்காரர்களுக்கு யோகமான காலம்.

பரிகாரம்: நாகை- திருத்துறைப்பூண்டி சாலையில் உள்ள தேவூர் தேவகுருநாத சுவாமி கோவில், ஆலங்குடி- திட்டை குரு ஸ்தலங்களுக்குச் சமமான குரு ஸ்தலம். அங்கு சென்று வியாழக்கிழமை வழிபடுவதால் குரு கடாட்சம் பெறலாம்.

மகரம்

(உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய)

மகர ராசிநாதன் சனி- 12-ல் குருவின் வீட்டில் செவ்வாயோடு சேர்க்கை. மகர ராசிநாதன் விரயத்தில் இருப்பதோடு- தான் நின்ற இடத்துக்கு 12-க்குடைய செவ்வாயுடன் சம்பந்தம். அதேபோல அவர்களுக்கு வீடு கொடுத்த குருவும் அவர்களுக்கு 12-ல்! எனவே எவ்வளவு கட்டுசெட்டாக இருந்தாலும்- சிக்கனத்தைக் கடைப்பிடித்தாலும் வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படத்தான் செய்யும். ஒருசிலருடைய அனுபவத்தில் அரைமணி நேரம் பஸ்ஸுக்காகக் காத்து நிற்பார்கள். ஷேர் ஆட்டோவும் வராது. பஸ்ஸும் வராது. பொறுமை இழந்து நடக்கத் தொடங்குவார்கள். அதற்குள் பஸ் வந்துவிடும். ஸ்டாப் இல்லாததால், பஸ் நிற்காமல் உங்களைத் தாண்டிப் போய்விடும். அடுத்து ஒரு ஷேர் ஆட்டோ வரும். அது போகவேண்டிய இடத்துக்கு நேரடியாகப் போகாது. முன்னால் வேறுபாதையில் திரும்பிவிடும். வேறு வழியில்லாமல் அதில் ஏறிப்போய் அங்கிருந்து நடந்துபோவீர்கள். இதை "நனைத்து சுமப்பது' என்றும் கூறலாம். சுண்டக்காய் கால் பணம் சுமைக்கூலி முக்கால் பணம் என்பார்கள். ஒருசிலர் நடக்கமாட்டாதவன் சித்தப்பா வீட்டில் பெண் கேட்டகதையாக செயல்படுவார்கள். இதெல்லாம் ஜென்ம கேது- சப்தம ராகுவின் வேலையோடு, ஏழரைச்சனியில் விரயச்சனியின் வேலையும் ஆகும். பொதுவாக ஒரு ஜாதகத்தில் சனி, ராகு- கேது சம்பந்தப்பட்டாலே சிக்கல்தான். ஒரு உதாரணம்- ஒருவர் தன் மனைவியை மிகவும் சோர்வாக- களைப்பாக இருக்கிறார் என்று குளுக்கோஸ் டிரிப் ஏற்றுவதற்காக பக்கத்தில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அவர் ஒரு காலத்தில் எளிமையான முறையில்- நியாயமான வைத்தியம் பார்த்த நண்பர்தான். ஆனால் ஆஸ்பத்திரியை 10 அல்லது 15 நர்ஸ், லேப், படுக்கை வசதி என்று டெவலப் செய்துவிட்டார். எல்லாவற்றுக்கும் சம்பளம் பட்டுவாடா, நிர்வாகச் செலவு என்று பணம் தேவையல்லவா! அதனால் அட்மிட் ஆகும் பேஷன்டை கோழி அமுக்கினமாதிரி அமுக்கி ஈ.சி.ஜி, பிளட் டெஸ்ட், சுகர் டெஸ்ட் என்று எல்லா டெஸ்ட்டுகளும் எடுத்து மூவாயிரம் ரூபாய்க்கு பில் போட்டுவிட்டார்கள். டாக்டர் 12 மணிக்கு வந்தார். அவர் வருவதற்குள் இந்த நாடகமெல்லாம் அரங்கேறிவிட்டது. அவர் வந்ததும் ரிப்போர்ட்டைப் பார்த்து, "ஹார்ட்டில் பிளாக் இருக்கிறது. நடக்கக்கூடாது; வேலை பார்க்கக்கூடாது. உடனே ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகி இரண்டு வாரம் ட்ரீமெண்டில் இருக்கவேண்டும்' என்று பயமுறுத்திவிட்டார். ஆக இன்றைக்கு மெடிக்கலும் எஜுகேஷனும் பணம் பறிக்கும் வழிகளாக மாறிவிட்டன.

பரிகாரம்: செவ்வாய்- சனி சேர்க்கை தோஷம் விலக நாச்சியார்கோவில்- பூந்தோட்டம் பாதையில் கூந்தலூர் முருகன்கோவில் சென்று வழிபட வேண்டும். சனியும் செவ்வாயும் எதிரெதிராக அமைந்துள்ள தலம்.

கும்பம்

(அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய)

கும்ப ராசிநாதன் 11-ல் செவ்வாயோடு சேர்ந்திருக்க, அவர்களுக்கு வீடு கொடுத்த குரு அதற்கு 12-ல் செவ்வாய் வீட்டில் இருக்கிறார். 2-ல் சூரியன், புதன், சுக்கிரன் சேர்க்கை. சுக்கிரன் உச்சம். புதன் நீசபங்கம். இவர்களுக்கு வீடு கொடுத்த குரு இவர்களை ராசிக்கு 10-ல் நின்று பார்க்கிறார். எனவே பொருளாதாரத்தில், தொழில்துறையில், வாழ்க்கையில் எந்த சங்கடங்களும் இல்லை. சஞ்சலங்களும் இல்லை. 11-க்குடைய குரு 10-ல் செவ்வாய் வீட்டில் பரிவர்த்தனை என்பதால் தொழில் லாபம் பெருகும். புதிய தொழில் முயற்சிகள் கைக்கூடும். சிலர் ஒரு இடத்தில் வேலை பார்த்துக்கொண்டே வேறு உபதொழிலைச் செய்யலாம். மனைவி, மைத்துனர், உடன்பிறப்புக்களை இணைத்து மேற்கண்ட உபதொழில் செய்யலாம். 6-ல் உள்ள ராகு கடன், போட்டி, பொறாமைகளை எல்லாம் விரட்டியடிப்பார். அதேபோல 12-ல் உள்ள கேது தேவையற்ற செலவுகளை எல்லாம் விலக்கிவிடுவார். 10-க்குடைய செவ்வாய் 11-ல் நின்று 9-க்குடைய சுக்கிரனை 4-ஆம் பார்வை பார்ப்பது, தர்மகர்மாதிபதி யோகமாகும். அரசு உத்தியோகஸ்தர்களுக்கு அதிகாரப் பதவி உயர்வு, ஊதிய உயர்வு, விரும்பிய இடப்பெயர்ச்சி ஏற்படும். தனியார்துறை ஊழியர்களுக்கும் அவர்களின் நேர்மைக்கும் விசுவாசத்துக்கும் ஏற்ற வகையில் சன்மானமும் கௌரவமும் முக்கியத்துவமும் உண்டாகும். ஒருசிலரின் யோகத்துக்கு முதலாளி ஊழியரின் நேர்மையை, உண்மை உழைப்பை உணர்ந்து தன் பெண்ணைக் கொடுத்து தொழில்துறையில் பங்குதாரராக இணைத்துக்கொள்ளலாம். எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் கடலை மாவு வியாபாரத்தில் டாப் டூ பாட்டம் எல்லாப் பொறுப்புகளையும் விசுவாசமாக கவனித்தார். அவரைத் தன் மருமகனாக்கிக்கொண்டதோடு தொழில் கூட்டுப் பங்குதாரராகவும் ஆக்கிக்கொண்டார். 7-க்குடையவர், 10-க்குடையவர், 11-க்குடையவர், 2-க்குடையவர் சேர்க்கை இருப்பதால் இப்படிப்பட்ட அதிர்ஷ்ட வாழ்வும் அதிர்ஷ்ட யோகமும் அமையும்.

பரிகாரம்: கும்பகோணத்திலிருந்து தெற்கே எட்டு கிலோமீட்டர் தொலைவில், பட்டீஸ்வரத்துக்கு இரண்டு கிலோமீட்டர் அருகில் உடையாலுர் என்ற ஸ்தலம் உள்ளது. சுக்கிரனுக்கு தனி ஆலயம். மூலவர் சுக்கிரன் நான்கு அடி உயரம். அருகில் சுகிர்தி- கட்சூரி என்று இரண்டு தேவியர். இராஜராஜ சோழனின் ஆயுதக்கிடங்காக இருந்தது. சுக்கிர பகவானால் சுகவாழ்வு பெறலாம்.

மீனம்

(பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

மீன ராசிநாதன் குரு 9-ல் நின்று உங்கள் ராசியைப் பார்க்கிறார். 9-க்குடைய செவ்வாய் 10-ல் குரு வீட்டில் பரிவர்த்தனை. அது தர்மகர்மாதிபதி யோகத்தையும் குறிக்கும். எனவே மொத்தத்தில் "குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா' என்று எம்.எஸ். சுப்புலட்சுமி பாடிய மாதிரி குறையில்லைதான். ஆனால் 5-ல் உள்ள ராகு நிறைவைத் தருகிறதா என்றால் அதுவும் இல்லை. அதற்கான காரணம் எதுவும் உண்டா என்றால் அதுவும் இருக்காது. இதெல்லாம் 10-ல் சேர்ந்திருக்கும் செவ்வாய், சனி சேர்க்கைப் பலன் ஆகும். உங்கள் காரியங்களும் தொழில்துறை அமைப்புகளும் நீங்கள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அதுஅது முறையாக நடக்கும். செயல்படும். என்றாலும் தான் நேரடியாகச் செய்யும் செயலைவிட மற்றவர்கள் செய்வது சரியாக இருக்குமா இருக்காதா என்ற ஒரு கவலை காணப்படலாம். உதாரணமாக, ஒரு பார்ட்டி தரவேண்டிய பாக்கிக்கு பாதித்தொகை ரொக்கமாகவும் மீதித்தொகைக்கு பின்தேதியிட்ட செக்கும் ஸ்தாபனத்தில் உள்ளவர்கள் வாங்கி வரலாம்.தான் நேரடியாகப் போனால் முழுத்தொகையையும் ரொக்கமாகவே வாங்கி வந்திருக்கலாமே என்று உணர்வு ஏற்படும். இதைத் தான் தான் போகிற வேலைக்கு தம்பியை அனுப்பினால் ஆகுமா என்பார்கள். அத்துடன் 5-ல் ராகு- திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்டபடி நடக்காமல் "போஸ்ட்போன்' ஆகும். உதாரணமாக திங்கட்கிழமை கோவிலுக்குப் பூஜைக்கும் அபிஷேகத்துக்கும் போக எல்லா ஏற்பாடுகளும் செய்வீர்கள். ஞாயிறு காலையில் வீட்டில் தலைக்குளித்துவிடுவார்கள். எல்லா "புரோகிராம்'களும் தள்ளிப்போய்விடும். 10-ல் உள்ள சனி 4-ஆம் இடம், 7-ஆம் இடங்களைப் பார்ப்பதால் சிலருக்கு சுகக்குறைவும் சில நேரம் மனைவி வகையில் ஆரோக்கியக்குறைவும் ஒத்துழைப்புக்குறைவும் உண்டாகலாம். ஏழரைச்சனி, அட்டமச்சனி என்று எதுவும் இல்லாவிட்டாலும் கோட்சார தசாபுக்தி சில பக்கவிளைவுகளை ஏற்படுத்தலாம்.

பரிகாரம்: கோட்சாரமும் தசாபுக்திகளும் அனுகூலமாக அமைய ஒரே பரிகாரம் ஹோமம் செய்வதுதான்! அக்னி காரியம்தான் எல்லாவற்றுக்கும் ஒரே நிவர்த்தி! அதேசமயம் அதற்கும் பிராப்தம் இருந்தால்தான் அமையும். முழு நம்பிக்கையும் ஆர்வமும் அக்கறையும் இருந்தால் பிராப்தமும் அமைந்துவிடும்.